கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. 570 கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. ('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.)அதிகாரம் 58. கண்ணோட்டம்[ அஃதாவது , தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை . இஃது அவர்மேற்கண் சென்றவழி நிகழ்வது ஆகலின் , அப் பெயர்த்தாயிற்று .மேல் வெருவந்த செய்யாமையுள் கூறிய அதனையே சிறப்புப் பற்றி விரித்துக் கூறுகின்றமையின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.] கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. 571 கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது. ('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)
|