கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.572 உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?. 573 பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து. ('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண். 574
|