பக்கம் எண் :

237
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
580
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். (நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

அதிகாரம் 59. ஒற்றாடல்

[ அஃதாவது , பகை , நொதுமல் , நட்பு என்னும் மூன்று திறத்தார் மாட்டும் நிகழ்ந்தன அறிதற்கு ஒற்றரை ஆளுதல். மேற்சொல்லிய இலக்கணத்தனாய அரசனுக்குத் தன் நாடு செலுத்துங்காலும், பிறர்நாடு கொள்ளுங்காலும் வேண்டுவன கூறுகின்றார் ஆகலின் , அவ்விருமைக்கும் இன்றியாமையாததாய இது முன் வைக்கப்பட்டது.]

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)