('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.) கடாஅ உருவொடு கண்ணாஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.585 கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந் தென்செயினும் சோர்வில தொற்று. 586 துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான். (விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.) |