இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.) சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை590 ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம். (மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.) அதிகாரம் 60. ஊக்கம் உடைமை[ அஃதாவது , மனம் மெலிதலின்றி வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல் . ஒற்றரான் நிகழ்ந்தன அறிந்து அவற்றிற்கு ஏற்ற வினைசெய்வானுக்கு இஃது இன்றியமை யாமையின் , ஒற்றாடலின்பின் வைக்கப்பட்டது.]
உடையர் எனப்படுவ தூக்கம் அஃதில்லார் உடைய துடையரோ மற்று. 591 உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.) |