வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி. ('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596 உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பா டூன்றும் களிறு. 597 களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. 598 |