உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும். (பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)உரம்ஒருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்கள் ஆதலே வேறு. 600 ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம் -அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை. (உரம் என்பது அறிவாதல், 'உரனென்னுந் தோட்டியான்' (குறள், 24) என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், தேவர் கோட்டம், இல்லம், தேர்,நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.) |