பக்கம் எண் :

245
அதிகாரம் 61. மடிஇன்மை

[ அஃதாவது , கருதியன செங்யுங்கால் சோம்புதல் இல்லாமை. ஊக்கம் உடையார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடிவருதல் நோக்கி , இஃது ஊக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது.]

குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

601
குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். (உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

602
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக. ('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

603