பக்கம் எண் :

248
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்.
609
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். (மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

610
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

அதிகாரம் 62. ஆள்வினை உடைமை

[ அஃதாவது , இடைவிடாத மெய்ம்முயற்சி உடையன் ஆதல் , அஃது ஆளும் வினையெனக் காரியத்தான் கூறப்பட்டது . மடிகெடுத்தாலும் வினை முயற்சியான் அன்றி ஆளப்படாமையின் இது மடியின்மையின் பின் வைக்கப்பட்டது .]

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

611