பக்கம் எண் :

249
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

612
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.

613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.