பக்கம் எண் :

252

(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

அதிகாரம் 63. இடுக்கண் அழியாமை

[ அஃதாவது , வினையின்கண் முயல்வான் தெய்வத்தானாக , பொருளின்மையானாக , மெய் வருத்தத்தானாகத் தனக்கு இடுக்கண் வந்துழி , அதற்கு மனங்கலங்காமை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
621
இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான். (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

622
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார்.