இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.629 இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)அரசியல் முற்றும். அங்கவியல்இனி , முறையானே அரசியல் நடாத்துதற்கண் ஒன்றற்கு ஒன்று துணையாய அங்கங்கள் ஆறனது இயல்பு, முப்பத்திரண்டு அதிகாரத்தால் கூறுவான் எடுத்துக்கொண்டு, அவை ஆறனுள்ளும் 'காவற்சாகாடு உகைத்தற்' கண் (புறம் 185) அவ்வரசற்கு இணையாய அமைச்சனது இயல்பு பத்து அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி, முதற்கண் அமைச்சுக் கூறுகிறார்.
|