சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.645 சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். 646 வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.)சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 சொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல்.இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.)
|