பக்கம் எண் :

264
அதிகாரம் 66. வினைத்தூய்மை

[ அஃதாவது , செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும் புகழும் பயந்து நல்ல ஆதல் .சொல்லேயன்றிச் செயலும் நன்றாக வேண்டும் என்கின்றமையின் , இதுசொல்வன்மையின்பின் வைக்கப்பட்டது.]

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

651
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

652
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

653