பக்கம் எண் :

266
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
656
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. ('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.)

பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

657
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

658
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)