வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.) ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662 ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.)கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். 663 கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல்.
|