அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.) சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.664 சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். 665 வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். 666 எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.
|