பக்கம் எண் :

270

('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து.
667
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.

668
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

669
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.