தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.) அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று.682 அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.)நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. 683 வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. 684 அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
|