(இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.) தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.685 தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.)கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாம் தூது. 686 கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.)
|