| கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந் தெண்ணி உரைப்பான் தலை.
 687கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து; காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி - சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான். (செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.) தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
 688வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.) |