விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்.689 விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது. 690 இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.) அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்[ அஃதாவது , அமைச்சர் அரசரைப் பொருந்தி ஒழுகுமாறு . இது ,' வேந்து அவாம் பண்பு உடைமை ' என மேலே (குறள் 618) வேண்டப்பட்டமையின் , தூதின்பின் வைக்கப்பட்டது . ]
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691 இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
|