பக்கம் எண் :

280

(கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.
692
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

693
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)