பக்கம் எண் :

284

(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.)

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
703
குறிப்பின் குறிப்பு உணர்வாரை - தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க. (உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று, உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.)

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

704
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.)

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

705
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)