பக்கம் எண் :

285
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
706
அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

707
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

708
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம்.