பக்கம் எண் :

286

குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.)

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
709
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால்
கண்அல்ல தில்லை பிற.

710
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை. (அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.)