பக்கம் எண் :

287

அதிகாரம் 72. அவை அறிதல்

[ அஃதாவது , அரசனோடிருந்த அவையினது இயல்பை அறிதல் ,காரியஞ் சொல்லுங்கால் அவன் குறிப்பறிதலேயன்றி இதுவும் வேண்டுதலின், இஃது அதன் பின் வைக்கப்பட்டது .]

அவைஅறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
711
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

712
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

713