முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.) ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.716 ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. 717 கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718 உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
|