புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்.719 நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 720 தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது. அதிகாரம் 73. அவை அஞ்சாமை[ அஃதாவது , சொல்லுதற்குரிய அவையினையறிந்து சொல்லுங்கால் அதற்கு அஞ்சாமை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]
|