வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.721 வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 722 கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர். 723 பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க.
|