பக்கம் எண் :

292

(எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.)

ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு.
725
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

726
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.

727
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.