பக்கம் எண் :

294

(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)

அதிகாரம் 74. நாடு

[ இனி , அவ்வரசனாலும் அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவதாய ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஓர் அதிகாரத்தாற் கூறுகின்றார். அஃதாவது இன்னதென்பதூஉம் அதிகார முறைமையும் இதனுள் விளங்கும்.]

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

731
தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்
ஆற்ற விளைவது நாடு.

732
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது.