பக்கம் எண் :

295

'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்'என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறைஒருங்கு நேர்வது நாடு.
733
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

734
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

735