(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.) அதிகாரம் 75. அரண்[ இனி , அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும், பகைவரால் தொலைவு வந்துழி , அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். 741 ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வௌவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.)மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடைய தரண். 742 மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார்.
|