மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.743 உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின)சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். 744 சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.)
|