இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47 இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48 ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49 அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது |