கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண்.745 கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்ஆள் உடைய தரண். 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். 747 முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
|