(வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.) அதிகாரம் 76. பொருள்செயல் வகை [ இனிப் பெரும்பான்மையும் நாட்டானும் அரணானும் ஆக்கவும் காக்கவும் படுவதாய பொருளைச் செய்தலின் திறம் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார். ]
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்ல தில்லை பொருள்.751 பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.)
|