பக்கம் எண் :

303
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
753
பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.

754
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)

அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்.

755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. (அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)