உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.756 உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)அருள்என்னும் அன்பீன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. 757 அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. 758 தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
|