('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.) செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனின் கூரிய தில்.759 பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.)ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 760 ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். (காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.)
|