அதிகாரம் 77. படை மாட்சி [ இனி ,அப்பொருளினான் ஆவதாய வெல்வதாய படை இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி ,முதற்கண் 'படை மாட்சி' கூறுகின்றார் . அஃதாவது , படையினது நன்மை. அதிகார முறைமையும் இதனான் விளங்கும்.]
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. 761 உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். (ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.)உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. 762 தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். 763
|