எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.) அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. 764 அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. 765 கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. ('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)
|