பக்கம் எண் :

308
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
766
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

767
தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

768