(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.) புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோள் தக்க துடைத்து.780 புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.) அதிகாரம் 79. நட்பு[ இனி , அப்படைபோல அரசனுக்கு வினையிடத்து உதவுவதாய நட்பினை ஐந்து அதிகாரம் விதிமுகத்தானும் , பன்னிரண்டு அதிகாரம் எதிர்மறை முகத்தானும் கூறுவான் தோடங்கி , விதிமுக அதிகாரம் ஐந்தனுள்ளும் முதற்கண் நட்புக் கூறு கின்றார் . அஃதாவது இன்னது என்பதூஉம் அதிகாரம் முறைமையும் இதனுள் விளங்கும் .]
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. 781 நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?
|