களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர். களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284 களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.) அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.285 அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.)அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.286
|