நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.) இனையர் இவர்எமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. 790 இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.) அதிகாரம் 80. நட்பு ஆராய்தல்[ அஃதாவது , மேற்சொல்லிய இலக்கணத்தாரை ஆராய்ந்தறிந்தே நட்க வேண்டுதலின் , அவரை ஆராயும் திறம் , அதிகார முறைமையும் இதனானே விளங்கும் . ]
நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791 நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை. (ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.)
|