பக்கம் எண் :

318
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
792
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

794
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.