(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.) அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல்.795 அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். 796 கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். 797
|