ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். (நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.) உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு. 798 உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)
|